குளோவர் அன்றைக்கும் காலையிலேயே எழுந்துவிட்டார். நேற்றிரவு உடல்நலமின்றி படுக்கையில் விழுந்தபிறகு, உள்ளூர் மருத்துவர் தந்த பச்சிலை மருந்தின் மிச்ச சொச்சம் இன்னமும் நாக்கில் கசந்தது. உடல் சோர்வாக இருந்தது. சேவகன் சவுக்கத் அலி தயாராக வைத்திருந்த கேழ்வரகு கஞ்சி, அழகாக நறுக்கப்பட்ட வெங்காயம், வெந்து மிதந்து கொண்டிருந்த மலைப்பூண்டு, கருவேப்பிலை மணத்துடன் பசியைத் தூண்டியது. தொட்டுக்கொள்ள வைத்திருந்த உப்பு, காரமிட்டு ஊறவைத்த மாவடு வேறு நாசியில் புகுந்து நடு வயிறு வரை சென்று பெருங்குடலை உசுப்பியது. பல்துலக்கி முகம் கழுவியபின் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறகுதான், மெஹருன்னிசா நீரருந்தக் கூட அனுமதிப்பாள்.
சிறுவயது முதல் படுக்கையிலிருந்து எழுந்த மறுகணமே வேக வைத்த முட்டையும், சுடச்சுட பருத்திப்பாலும் அருந்திய பிறகுதான், படுக்கையிலிருந்து குளோவரின் கால்கள் தரையில் படும். அப்படி முப்பது வருடங்கள் பழகிய உதடுகளும், வயிறும் திருமணமான ஒரு சில நாட்களில் எப்படி, இப்படி மாறின? ஒழுங்கற்ற மலைப்பாதையில் குதிரையின் துணையின்றி ஒரு போதும் வீட்டு வாசலை விட்டு வெளியே வராதவன் எப்படி கால்களால் நடந்து பஞ்சப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை வரை பதினெட்டு மைல் நடக்க முடிகிறது? இதையெல்லாம் தாய் மார்க்ரெட்டிடம் சொன்னால் நம்பக்கூட மாட்டாள். சில வருடங்களுக்கு முன்னால் தன்னிடம் யாராவது சொல்லி இருந்தால், தன்னால் கூட நம்பி இருக்க முடியாதுதான். ஆனால் அத்தனையும் உண்மை.
தனது ஒற்றைக்கையால் தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை நீக்கினார் குளோவர். இடது கை என்பது தோள்பட்டை வரை மட்டும்தான். பர்மா இரண்டாம் யுத்தத்தின் எஞ்சிய அடையாளம் இந்த மழுங்கிய கைதான். கம்பெனியின் ஜெனெரல் ஃபிரான்சிஸ் டே எப்பொழுது சந்தித்தாலும் குற்ற உணர்ச்சியினால் குளோவரின் கண்களை நேரில் சந்திக்க விரும்பாமல் தவிர்ப்பார்.
“நிர்வாகத்தின் முடிவைத்தானே எனக்கு ஆணையாக அளித்தீர்கள்.. இதில் தாங்கள் சங்கடப்பட என்ன இருக்கிறது?” என்று எத்தனையோ முறை குளோவர் அவரைக் கேட்டிருக்கிறார்.
“திருமணமான சில மாதங்களுக்குள் உன்னை நான் பர்மா யுத்தத்துக்கு அனுப்பி இருக்கக் கூடாது. மேலிடத்தில் பேசி இருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன் கேம்பல்.. என்னால் இழந்த உனது கையைத் திருப்பித்தர முடியுமா? அல்லது உனது காதல் மனைவி மெஹருன்னிசாவைத்தான் உயிரோடு கொண்டு வர முடியுமா? மேலிடத்தின் உத்தரவுகளை மட்டுமே நிறைவேற்ற நான் என்ன உயிரற்ற இயந்திரமா? நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்?. ஒரு போதும் நீ என்னை மன்னித்துவிடாதே. நான் அதற்குத் தகுதியற்றவன்” என்று கலங்குவார் ஃபிரான்சிஸ் டே.
யுத்தமுனைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆணை தனக்கு வந்தபொழுது தன்னால் கூடத்தான் நம்பமுடியவில்லை. ஆனால் நிர்வாகம் உத்திரவிட்டபிறகு எப்படி மீற முடியும்? அதுவுமில்லாமல் ராயக்கோட்டை கேப்டன் என்கிற பதவியே இதற்குமுன் தான் யுத்தக்களத்தில் இயங்கிய ஆக்ரோஷமான பங்களிப்புக்கான பரிசுதானே? ஒவ்வொரு முறையும் வெற்றியின் உச்சியேறி உற்சாகத்துடன் தான் தங்கியிருக்கும் மகால் திரும்பிய ஜான் கேம்பல் குளோவருக்கு இழப்பு தோல்வி என்ற சொற்களே அவரது பணிக்காலத்தில் கேள்விப்பட்டதில்லை. அப்படியான வரலாற்றைக் கொண்ட குளோவர் திருமணமான காரணத்தைச் சொல்லி யுத்த அழைப்பை மறுப்பது கோழைத்தனமில்லையா? என்று மெஹருன்னிசா அழுத்தமாக வலியுறுத்திய பின்னர், உண்மையில் அவரது உள்ளம் பூரித்தது. ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி ஒரு இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்த பின் யுத்தக்களத்துக்கு செல்லாவிட்டால் அந்தப்பழி தன் மீதல்லவா விழும் என்றெல்லாம் மெஹருன்னிசா நியாயமான காரணத்துடன் அவளது உளக்கிடக்கை வெளிப்படுத்தியது அவருக்குள் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதே ஆவேசத்துடன் களத்துக்குச் சென்றபோது இப்படி ஒற்றைக்கையை இழப்பேன் என்று நினைத்தா பார்த்தோம்? என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
போரிலிருந்து திரும்பியபோது அவரது இடது கை துண்டிக்கப்பட்ட நிலையிலும், முகமெல்லாம் காயங்களின் வடுக்களாலும் நிரம்பி இருந்ததைப் பார்த்த மெஹருன்னிசா தன்னால்தான் எல்லாம் என்று உடைந்து போனாள். பல நாட்கள் அவள் உறங்கவே இல்லை. குளோவர் எத்தனை முறை தேற்றினாலும் அவள் மனம் சமாதானம் அடையவே இல்லை. இரண்டு வேளை உணவைத் துறந்து ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டாள். மெலிந்து, தளர்ந்த தேகத்தில் கண்களும் உதடுகளும் மட்டுமே ஒளியைச் சிந்தின. சற்றே தடித்த நூல் போல் ஆனது அவள் உடல். அழுவதற்கு தெம்பில்லாமல் வற்றி வதங்கி படுத்தப் படுக்கையானாள். காற்றைத் தவிர இனியும் என்ன இருக்கிறது அவள் உடலில் என்கிற ஆற்றாமையில் அவளை ஆரத்தழுவிக்கொண்டது மரணம்.
ஒற்றைக்கையை ஊனி படுக்கையிலிருந்து எழுவதற்காக முயற்சி செய்தபோது சற்றே தடுமாறி படுக்கையில் மறுபடி விழுந்தார் குளோவர்.
“மாட்சிமை பொருந்திய துரை அவர்களுக்கு சவுக்கத் அலியின் வணக்கம். இப்பொழுதுதான் தங்களுக்காக அடுப்பில் சுடுதண்ணீர் வைத்து விட்டு நன்கு கொதிக்கட்டுமே என்று சற்று கூடுதலான நேரம் அடுப்படியில் நின்றுவிட்டேன்.. அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று கேட்டபடி சுடுதண்ணீர் குவளையை குளோவர் முன் வைத்தார் சவுக்கத். பின்னர் அவரைத் தாங்கி பிடித்து தூக்கி மீண்டும் சரியாக அவரை படுக்கையில் படுக்கவைத்தார்.
“தண்டனையா? உனக்கா? எனக்கு இப்பொழுது இருக்கும் ஒரே துணையே நீதானே உனக்கு போய் தண்டனைத் தருவேனா? நீ ஏன் என்னை வெறுக்க மாட்டேன் என்கிறாய்? இன்றில்லாவிட்டால் என்றாவது ஒருநாள் சலிப்பும், அலுப்பும் மிதமிஞ்சி என்னை கை விட்டு வெகுதூரம் போய்விடுவாய் என்று எனக்குத் தோன்றுகிறது. இத்தனை உபசரிப்புகளையும், அன்பையும் பழக்கிவிட்டு என்னை ஏக்கத்தில் தவிக்கவிட்டு விட்டு விலகிச் சென்றுவிடுவாய் என்று அஞ்சுகிறேன் சவுக்கத். ஒருவேளை நீ என்றைக்குச் செல்கிறாயோ அன்றைய தினம் என் வாழ்வின் கடைசி தினமாக இருக்கும்”
“இந்த உயிர் என் உடலைவிட்டு என்றைக்குப் பிரிகிறதோ அன்றைக்குத்தான் நான் உங்களைவிட்டுப் பிரிவேன். மெஹருன்னிசாவுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். அவளை மீறும் சக்தி எனக்கு இல்லை கேப்டன். இன்றைக்கு மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் நீங்கள்…. இன்றைக்கு இங்கேயே ஓய்வெடுங்கள். நாளை உடல்நிலையைப் பார்த்துக்கொண்டு ராயக்கோட்டை செல்லலாம்”
“சரி உனக்கென்று மனைவி குடும்பம் குழந்தைகள் இப்படி எதுவுமில்லாமல் எனக்காக உன்னை அழித்துக்கொண்டிருப்பது என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது சவுக்கத். நீ உன்மனதை மாற்றிக்கொள்ள மாட்டாயா?”
“அது ஒரு உறுதிப்பாடு கேப்டன். உண்ணாமல் இருப்பது. ஒரு கருத்தில் மனம் மாறாமல் பற்றிக்கொண்டு இருப்பது இவைகளில் எல்லாம் எனக்கும் மெஹருன்னிசாவுக்கும் எந்த மாறுபாடும் இல்லை”
கேம்பல் குளோவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பெருமூச்சுவிட்டார்.
“என் உடலையும் மனதையும் என் சகோதரி மெஹருன்னிசா ஆட் கொண்டுவிட்டாள். அவள் உயிருடன் இருந்திருந்தால், இப்படித்தான் நீங்களே கதி என்று பழியாய் கிடந்திருப்பாள். நீங்கள் எவ்வித மனக்கிலேசமும் அடையவேண்டாம் கேப்டன். எத்தனை முறை நீங்கள் வற்புறுத்தினாலும் என் மன உறுதி மாறாது”
“ஆமாம் சவுக்கத் …மெஹருன்னிசா உன்னை ஆட்கொண்டுவிட்டாள். அவளைப் போலவே நீயும் பிடிவாதக்காரன். உங்கள் தந்தையார் முதன்முதலில் ஒரு பாதுகாவலராக என்னிடம் வந்தார். கோத்தகிரி மலையில் ஒரு தேயிலைத் தோட்டம் அமைக்க அவரையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். அவரும் கிளம்பி வந்துவிட்டார். நாங்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த சமயம் உன் சகோதரி, உன் தந்தை எடுத்துக்கொள்ள மறந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு மூச்சிரைக்க பத்து மைல்தூரம் வேகமாக ஓடிவந்து தந்தாள். அப்பொழுது நீ சிறுபிள்ளை”
“ஆமாம் கேப்டன்”
“அந்த மருந்துகளை என்னால் போகிற இடத்தில் தருவித்து தந்துவிடமுடியும். அது உன் குடும்பத்தாருக்கும் தெரியும். ஆனாலும் உன் சகோதரி தந்தே தீருவேன் என்று ஓடி வந்து தந்தாள். அந்தப் பிடிவாதம்தான் அவளது அடையாளம். அக்கணமே அவள் என் மனதுக்குள் குடியேறிவிட்டாள். அவளும் அவள் மனதை அப்படியே என்னிடம் தந்துவிட்டாள். நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிற விருப்பத்தை உன் தந்தையிடம் தெரிவித்தபொழுது உங்கள் குடும்பம் பேரதிர்ச்சிக்குள்ளானது”
“அதுவரை அப்படியான சிக்கலான தருணத்தை என் குடும்பத்தினர் சந்தித்ததில்லை கேப்டன். ஒரு பக்கம் எங்கள் எஜமானர் நீங்கள்.. இன்னொரு பக்கம் எங்கள் உறவினர்களின் அழுத்தம்”
“ஆனால் மெஹருன்னிசா என்னை உயிரைவிடவும் மேலாக நேசித்தாள்”
“எங்கள் தந்தையும் மெஹருன்னிசாவை அப்படித்தான் நேசித்தார்”
“உங்கள் உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் உங்கள் அத்தை இதே பஞ்சப்பள்ளியில் அவளது வீடு. இங்கு வந்து மெஹருன்னிசா அவருடன் தங்கிவிட்டாள். தினமும் பஞ்சப்பள்ளியில் இருந்து தந்தையின் வீடு இருந்த ஜக்கேரிக்கு நடந்தே வருவாள். வீட்டுக்குள் வந்து அமர்ந்து சம்மதம் தருவீர்களா என்று கேட்பாள். பதில் இல்லை என்றால் மறுபடியும் பஞ்சப்பள்ளிக்கு நடந்தே சென்றுவிடுவாள். வரவும் போகவும் ஒன்பது மைல்கள். ஆக மொத்தம் பதினெட்டு மைல்கள் தினமும் நடந்து சம்மதத்துக்காக போராடினாள். நாற்பத்தி எட்டு நாட்கள் இப்படியாக நடந்து சம்மதம் பெற்றாள். நான் அவளுக்காக அதைப்போல் மூன்று மடங்காவது நடக்க வேண்டாமா?”
“இந்தக் கதையை நீங்கள் இதுவரை ஐம்பது முறைக்கு மேல் சொல்லிவிட்டீர்கள். நானும் அதை புதிதாகக் கேட்பது போல தினமும் கேட்கிறேன்”
“வேறு யாரிடம் போய் இதை நான் சொல்ல..? இதைவிட வேறு என்ன சிறந்த விஷயம் இருக்கிறது என்னிடம் சொல்ல?”
“ஆனால் இன்றைக்கு மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் கேப்டன். நீங்கள் நிச்சயம் ஓய்வெடுக்க வேண்டும்”
“என்னிடம் ரொம்ப நாளாக தில்லி சுல்தான் ஷாஜகான் மும்தாஜ் கதையைச் சொல்வதாக ஏமாற்றிக்கொண்டே இருக்கிறாய். இன்றைக்கு நீ அதைச் சொல்வாயா?”
“அந்தக்கதையைக் கேட்டால் நீங்களும் காதலில் பித்துப்பிடித்தவராக மாறிவிடுவீர்கள் என்றுதான் இத்தனை நாள் சொல்லவில்லை. ஆனால் இன்றைக்கு சொல்கிறேன்.. நீங்கள் இன்றைக்கு ராயக்கோட்டைக்கு நடந்து செல்வதைத் தவிர்த்து ஓய்வெடுக்கிறீர்களா?”
“சரி நீ சொல் சவுக்கத்”
“ஷாஜஹானுக்கும் உங்களுக்கும் பல ஒற்றுமை இருக்கிறது. கேப்டன். நீங்களும் மெஹருன்னிசாவும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீரும் தாய் ஜோதா பாயும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். நீங்கள் மெஹருன்னிசாவை தற்செயலாக வழியில் சந்தித்து காதல் கொண்டீர்கள் அது போலவே ஷாஜகானும் ஒரு பொன் நகை சந்தையில் சந்தித்தார். போர்தான் உங்கள் இருவர் வாழ்க்கையிலும் விளையாடியது. ஷாஜகான் லோடிக்கு எதிராக போர் செய்ய சென்ற போது நானும் வருவேன் என்று கர்ப்பமாக இருந்த மும்தாஜும் பிடிவாதமாக உடன் சென்றாள். கிட்டத்தட்ட 700 மைல்கள் நெடுந்தூரப் பயணம் அவளை நோயில் தள்ளி மரணத்தைத் தந்தது. ஷாஜகான் மனைவியின் நினைவாக தாஜ்மகாலைக் கட்டினார். கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் இன்றைக்கு மெஹருன்னிசாவுக்காக ராயக்கோட்டையில் ஒரு மகாலைக் கட்டிவிட்டீர்கள்”
“ஷாஜகான் கட்டிய மகால் இப்பொழுது எங்கே இருக்கிறது சவுக்கத்?”
“ஆக்ராவில் யமுனை நதிக்கரையில்.”
“ஒரு நாள் அங்கு போகவேண்டும் சவுக்கத்”
“நிச்சயம் போகலாம் கேப்டன். ஆனால் அவரது முடிவு மிக சோகமானது. தாஜ்மகாலை மிகப்பிரம்மாண்டமாகக் கட்டி முடித்த சில நாட்களிலேயே சொந்த மகனால் சிறை வைக்கப்பட்டார். சிறை வைக்கப்பட்ட இடத்திலிருந்து தாஜ்மகால் ஒன்றரை மைல் தூரம். அங்கிருந்த சாளரத்தின் வழியே தினமும் அவரால் பார்க்க முடிந்ததே தவிர இறக்கும் வரை மகாலுக்குள் அவரால் செல்லவே முடியவில்லை. ஏக்கத்துடன் மகாலைப் பார்த்தபடியே அவர் ஒருநாள் மரணமடைந்தார்”
“அப்படியா? எத்தனை துயரம் அது.. அவரது மகன் அவரைக் கொல்லவில்லை. ஆனால் அவரது காதலைக் கொன்றுவிட்டான். அவரது காதலால் கிடைத்த பரிசே அவர் காதலைக் கொன்றது கொடுமை இல்லையா சவுக்கத்”
“ஆமாம் கேப்டன்”
“ஒரு வகையில் நான் ஷாஜகானைவிட அதிர்ஷ்டசாலி இல்லையா சவுக்கத்”
“ஆமாம்…… அதுவும் சரிதான்”
“என்னை யாரும் சிறையில் அடைக்கவில்லை. கோட்டைக்கு செல்லக் கூடாது என்று ஆணையிடவில்லை.. நான் கட்டிய காதல் மாளிகைக்குள் நுழையக்கூடாது என்று தடை செய்யவில்லை”
“ஆமாம் கேப்டன் அத்தனையும் உண்மைதான்”
“அப்படியானால் இந்த உடல் சோர்வும், அங்க ஹீனமும் எப்படி என்னை தடை செய்ய முடியும்? எதுவுமே தடுக்க முடியாத போது நான் ஏன் படுக்கையில் கிடக்க வேண்டும்? இப்படி ஏதோ பல காரணங்கள் மெஹருன்னிசாவுக்கும் தோன்றி இருக்கும் இல்லையா? ஆனால் அவள் சம்மதம் கிடைக்கும் வரை ஒருநாளும் நடந்து வருவதை நிறுத்தவே இல்லை அல்லவா?”
“நீங்கள் எங்கு வருகிறீர்கள் என்று புரிகிறது”
“அவள் என் மீது கொண்ட காதலில் ஒரு சதவிகிதம் கூட குறை இல்லையே.. பின் எப்படி என் காதலும் குறையாக இருக்க முடியும்?” என்று உற்சாகமாகச் சொன்னவர் சட்டென்று எதையும் பிடிக்காமல் படுக்கையிலிருந்து தன்னெழுச்சியாக எழுந்துகொண்டார்.
“சவுக்கத் உனக்குள் இருக்கும் அதே மெஹருன்னிசா எனக்குள்ளும் இருக்கிறாள். அவளின் உறுதிக்கு முன் எல்லா காரணங்களும் எரிந்து சாம்பலாகிவிடும். அனுதினமும் அவளுக்காக எழுப்பிய மகாலைப் பார்க்காமல் என்னால் உறங்க முடியாது. நீர்க்குவளையையும், கஞ்சிப் பானையையும், மூங்கில் குடையையும் எடுத்துக்கொடு. உனக்கு உடல் சோர்வாக இருந்தால் இங்கேயே இருந்துவிடு என்னால் இருக்க முடியாது. பதினெட்டு மைல் என்பதெல்லாம் ஒரு தூரமே இல்லை சவுக்கத்” என்று உற்சாகமாகக் கிளம்பிவிட்டார் குளோவர்.
“எனக்குள் இருக்கும் மெஹருன்னிசா உங்களைத் தனியே அனுப்ப அனுமதிக்க மாட்டாள்” என்றபடி யாவற்றையும் எடுத்துக்கொண்டு அவருடன் கிளம்பினார் சவுக்கத். குளோவருக்குள் இருந்த காதல் அவரை தளர்வின்றி அழைத்துச் சென்றது.










