நான் முகவரியை மாற்றியபோது
என் மொழியும்
என்னிடம் இருந்து மெதுவாகப் பிரிந்தது.
பேச வேண்டிய இடத்திலும்
பேசப்படாத வார்த்தைகள்
என் நாக்கின் கீழ்
சிறிய மலைகளாக
வளர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்நிய வீட்டின் கதவுகளைத்
தூசு துடைத்துத் துப்பரவு செய்யுமெனக்கு சொந்த வீட்டின் கதவுகள்
சேதமுற்றதை சரி செய்யத் தெரியவில்லை.
என்னோடு ஒட்டியிருக்கும்
சோப்புத் தூள் வாசனையும்
பாத்திரங்களின்
முனுங்கல்களும்
புகையின் கசந்த நெளிவுகளும்
அது
யாருக்கும் தெரியாத ஒரு வாழ்வின் கதை
அப்போதெல்லாம்
இந்தப் பொழுதுகள்
கவிதைகளைப் படித்திருந்தன
இந்தப் பார்வைகள்
வண்ணங்களோடு வடிந்திருந்தன
இப்போது
வாழ்வாதாரத்தின் வதைமுமாமில் அவை அத்தனையும் அடங்கிப் போகின…
என் கனவுகள் மட்டும்
இன்னும்
என் மார்புக்குள் எனக்காக உழைத்துக் கொண்டே இருக்கின்றன
நான் என்னை நம்பும் அளவுக்கு…
ஒருநாள்
நான் திரும்பிச் செல்வேன்
மொழியற்ற என் முகத்தைக் கிழித்து
சொந்த வாழ்க்கையின் முகவரிக்கு…
—
தங்காத காதல்
நான் உன்னை
ஒரு அற்புதமான கதையைப் போல பாதுகாத்தேன்
நீ என்னை ஒரு குப்பைக் கதையாக வடிவமைத்தாய்
மன்னித்தேன்
என் வாழ்நாள் முழுவதுமான மன்னிப்புகளை
உனக்கே கொடுத்துத் தீர்த்தேன்
அப்போதும்
நீ
என்னிடம் வந்தபோதெல்லாம்
உன் கைகளில்
ஒரு பிரிவின் கடிதம் இருந்தது.
என் அமைதியான
தனிமைக்குள்
உன் குரலை மட்டும் அனுமதித்தேன்
என் தனிமைக்கு
தேநீர் ஊற்றுவதற்கு பதில்
காயப்படுத்துவதிலே கவனமெடுத்தாய்
இந்த இடத்தில்தான்
நான் என்னை ஆறுதல் செய்ய ஆரம்பித்தேன்
ஒரு பெண்
யாராலும் நேசிக்கப்படாமல் இருந்தாலும்
தன்னைக் கவனிக்க தொடங்கிய நாளில்
அவள் உள்ளே
ஒரு பிரபஞ்சம் பிறக்கிறது
அதில் இன்னொரு குரல் எப்போதும் நுழைய முடியாதபடி….
வசைப் பேச்சு
நெஞ்செலும்பில் நிற்கும்படி
உரத்தே சொல்லிவிட்டார்கள்
இனி அதை எங்கும் செரிக்காதபடி.
மூச்சுக்கு மூச்சு
ஒரு நோவு
எந்த மூலிகையில்
இந்த வருத்தங்களை இறக்கி வைப்பது?
நித்திரையின் நிலுவை இன்னும் நீளமானால்
கண்கள் உப்புக் குடுவையாய் பூத்தே போய்விடும்…
எனக்கெதற்கு
இத்தனை போராட்டமான வாழ்வு
தனி ஒருத்திக்காக
ஏன் இந்த வாழ்வைத் தீர்மானித்தான் இறைவன்?
வயது முப்பதை முடித்து
அடுதொன்றுக்கு வந்துவிட்டது
மீதமிருக்கும் வாழ்வை எனக்குப் பதில்
யாரேனும் வாழ்ந்து மகிழட்டும்.










