காலை முதல் அழுதழுது மயங்கிச் சரிந்து போனவளுக்கான எந்தத் தடமும் இல்லாமல் சாபிரா, தன் வயதுக்குரிய குழந்தைமை மாறாது, அத்தனை குதூகலமாக வேனுக்குள் ஏறிக்கொண்டாள்.
சற்று முன்பு வரை நடந்த நிகழ்வே வேற!
குறுகலான தெரு. சாக்கடைகள் இல்லாததால் ரோடு முழுவதும் குறுக்காகக் கால்வாய்கள் வெட்டி அதில் கழிவுகளை ஓடவிட்டிருந்தனர். ஒவ்வொன்றையும் தாண்டும்போதும் ஜன்னத், தன் புர்காவைத் தூக்கிக்கொண்டாள். தூரம் செல்லச் செல்ல தெருவே கால்வாய்களாக இருக்க, தூக்கிய புர்காவை ஜாஸ்மினின் வீட்டு வாசலில்தான் இறக்கினாள்.
சாபிராவும் ஜாஸ்மினும் தோழிகளாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாகியிருக்கும். ஆனால் இன்றுதான் முதல்முறையாக சாபிராவின் அம்மா ஜன்னத், ஜாஸ்மினின் வீட்டிற்கு வருகை புரிந்திருக்கிறாள். ஜாஸ்மினின் உடல்மொழி, ஆடை, பின்னல் ஆகியவற்றையெல்லாம் கொண்டு அவளின் குடும்ப நிலையை ஏற்கனவே ஜன்னத் கணித்து வைத்திருந்ததற்குச் சற்றும் தப்பாமல் வீடு அமைந்திருந்தது. ஓடு வேய்ந்த வீடு, அறை ஏதும் இல்லை, ஒரு திண்ணை, ஹால், ஓர் ஆள் நின்றாலே நிறைந்துபோகும் சமையல்கட்டு. அவ்வளவுதான் வீடு.
ஜீனத்க்கு கால் பரபரத்தது. இத்தனை நாட்களாக ஜாஸ்மின் அடிக்கடி புராணம் பாடும் சாபிராவும் அவள் அம்மாவும், வீட்டுக்கே வருவார்கள் என அவள் நினைத்திருக்கவில்லை.
தினமொரு கல் வைத்த சேலை, கலையாத முடி, ஜீனத் சுற்றி எப்போதும் சென்ட் மணமணக்கும் என்றெல்லாம் ஜாஸ்மின் சொல்லியிருக்கிறாள். சாபிராவின் அத்தா வெளிநாட்டிலிருந்து வந்தபின்னே கூடுதல் நகையுடனும், தலைநிறையப் பூவுடனும் இன்னும் அழகேறி மிளிர்வதாகவும் சொல்லியிருந்தாள். ஜாஸ்மின் சொன்னதை விடவும் பலமடங்கு ஜொலிப்போடுதான் காட்சியளித்தாள் ஜன்னத்.
எத்தனை உறவினர்கள் திடுதிபுவென்று வீட்டுக்குள் நுழைந்தாலும் சமாளித்துவிடலாம், ஆனாலும் பெரும் பணக்காரர்களின் பிரவேசத்தை அவ்வளவு எளிதாகக் கையாளமுடிவதில்லை.
பாயும் விரித்துவிட்டு, நாற்காலியும் இழுத்து பேனுக்கு நேராக நகர்த்திவைத்தாள். ஜன்னத்தை அமர வைப்பதற்கு இன்னும் இரண்டு, மூன்று தெரிவுகள் இருந்தால் அதையும்கூட பாய், நாற்காலியோடு சேர்த்து அந்த அறையை நிறைத்திருப்பாள். ஜன்னத் தான் ஜீனத்தின் பரபரப்புக்கு நங்கூரமிட்டு நிறுத்தினாள்.
“இங்கே பாருங்க ஜாஸ்ஸம்மா! எதுவும் மெனக்கெட்டுச் செய்யாதீய. தண்ணி மட்டும் தாங்க.”
ஏற்கனவே கழுவி வைத்திருந்த சொம்பை மீண்டும் ஒருமுறை அழுத்திக் கழுவி, நிறைகுடமொன்றில் அழுத்தி நீர் எடுத்தாள். வழிந்த நீரில் அடுப்படியின் பாதி இடம் ஈரமாகியிருந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் ஜீனத் இல்லை. தன் சேலை முந்தானையால் சொம்பு சுற்றிலும் நீரைத் துடைத்துவிட்டு பின்னர் ஜன்னத்திடம் நீட்டினாள்.
ஜாஸ்மின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. எதிர்பார்ப்புகள் உருவாக்கிக்கொள்ளக் கூடாது என அவளின் குடும்பச் சூழல் அவள் குழந்தைமையை அழித்து பலகாலமாகிவிட்டது. அல்லது அப்படி ஒன்று அனுபவிக்காமலேயே சிறுவயது முதலே முதிர்ச்சி பெற்றிருக்கிறாள். ஆனால், அவள் கையை இறுகப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்த சாபிராதான் அழுதழுது கன்னம் வீங்கி இருந்தாள்.
“இந்த ஏரியா தண்ணி நல்லாருக்கே”
அடி பைப் தண்ணிக்கு ஜன்னத் கொடுத்த பாராட்டு, கைப்பக்குவத்திற்குக் கிடைத்ததுபோல் உள்ளம் முழுமைக்கும் தித்திப்பை நிறைத்தது. பணக்காரர்களின் ஒவ்வொரு சொல் உதிர்ப்பும் அமிர்தம்தான்.
சம்பிரதாயப் பேச்சுகள் போதுமென ஜன்னத்க்கு தோன்றியதால் உடனடியாக வந்த காரியத்திற்கான பேச்சைத் துவக்கினாள்.
“அனுப்பி வைங்க. அவளும் டூர் எங்கேயும் போனதில்லன்னு சொன்னா..”
ஜீனத் தன் மகளைப் பார்த்து முறைத்தாள்,
“எது! எங்கேயும் போனதில்லையா.. ஏன்சீ! வருசா வருசம் நாகூர்க்கு நன்னா, மாமுமார்களோட போறோம்ல… எங்கேயும் போனதில்லைன்னிருக்க”
எதுவும் பதில் சொன்னால் காரியம் கெட்டுவிடுமென ஜாஸ்மின் வாய் இறுக மூடிக்கொண்டாள்.
“ஏங்க ஜாஸ்ஸம்மா! தர்ஹாக்கு போறதுலாம் டூர்ங்க்ளா? உங்களுக்குன்னா அது டூர்ரா இருக்கலாம். சின்னபுள்ளைக தானே! அதுகளுக்கு என்ன சந்தோஷம் அதுல கெடைக்கும் சொல்லுங்க. அருவி,மலை, கடல்ன்னு காணாததைச் சுத்தி பாக்க வேண்டாமா?”
‘ஜாஸம்மா’ என ஜன்னத் அழைப்பதுபோல் ‘சாபிராம்மா’ என அவளை அழைக்க ஜீனத்க்கு முடியவில்லை. அக்காவா, அம்மாவா எனப் பரிதவிப்பான மனப்பட்டிமன்றத்திற்கு பின் எளிதென வாய்க்கு எது வருகிறதோ அதையே முடிவாகக் கொண்டாள்.
“இல்லக்கா, எங்களுக்கு அப்படி போயி பழக்கம் இல்ல”
“சரி நீங்க போகாதீங்க. ஜாஸ்ஸ அனுப்பி வைங்க. எப்படி கூடிட்டு போறேனோ அப்படியே உங்க கிட்ட வந்து ஒப்படைக்கிறேன். பயப்படாம அனுப்புங்க.”
“அய்யோ! அக்கா! தெனைக்கும் உங்க வீட்ல தான் ஜாஸ்ஸு கெடக்கா. பயந்தா நா அனுப்புவேனா… எம் மாப்புள கிட்ட கேக்கணும்.”
சொல்லிக்கொண்டே சுவரில் மாட்டப்பட்டிருந்த காலண்டரைப் பார்த்தாள் ஜீனத். உள்ளத்திலிருக்கும் யோசனைகளையெல்லாம் கைகளில் பிசைந்து கொண்டே அசைபோட்டபடியிருந்த ஜீனத்தின் உடல்மொழியை ஏதோ புரிந்தவளாய் ஜன்னத் முந்திக்கொண்டாள், “மாசக்கடைசின்னுலாம் யோசிக்காதீங்க. எதுவும் காசு தர வேண்டாம். புள்ளைய மட்டும் அனுப்பிவச்சா போதும். 2 நாள் தானே? இந்த வயசுல தானே அனுபவிக்க முடியும். கொமரியாகிட்டா அனுப்புவோமா சொல்லுங்க. இல்ல புருசன் வீட்டுக்குப் போய்ட்டப்பொறவு இப்படி தோழிமார்களோட உக்காந்து அஞ்சு நிமிஷமாச்சும் பேசிடவும் முடிஞ்சுடுமா?”
ஜன்னத் பேசப்பேச சாபிராவின் கன்னத்திலிருந்த வீக்கமெல்லாம் வற்றி மகிழ்ச்சியின் அலை எழும்பத் தொடங்கியது. எப்படியும் அம்மா, ஜாஸ்மீனை சுற்றுலாவிற்குத் தங்களோடு கூட்டிப்போக அனுமதி வாங்கிவிடுவாள் என அவளுக்கு நம்பிக்கை கூடியது. ஜாஸ்மினின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.
ஜன்னத் சொன்ன எதையும் மறுமொழியில் கறாராகவோ கனிவாகவோ பேசி தடைபோட ஜீனத்க்குத் தெரியும். ஆனால் முதல்கட்டத்திலேயே பணக்காரர்களுடன் பேச்சில்கூட போட்டிப்போட முடிவதில்லை என்பதுதான் எதார்த்தம்.
சரி எனச் சொல்லாமலேயே தலைமட்டும் அசைத்து ஆமோதித்தாள்.
கடந்த வருட பெருநாளிற்கு ராமநாதபுரம் ஜவுளிக்கடையில் வாங்கிய கட்டப்பை ஒன்றுதான் புதியதாக இருந்தது. பீரோவுக்கும் சுவருக்குமான இடுக்கில் சுற்றிவைக்கப்பட்ட அந்தப் புதிய கட்டப்பையை ஜாஸ்மினிடம் கொடுத்தாள். இரண்டு நாட்களுக்கான துணிகளைக் கட்டப்பையில் வைப்பதற்கு சாபிரா உதவினாள். அனுமதி கொடுத்த அம்மா மீண்டும் மனம் மாறுவதற்குள் அவ்வீட்டை விட்டுக் கிளம்பிவிட இருவரும் வேகவேகமாக மற்றப்பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டம்தான். நூல்கண்டு பாக்ஸில் நூல்களுக்குக் கீழே ஒளித்து வைத்துச் சேர்த்து வைத்திருந்த பணத்தை மகளிடம் கொடுப்பதற்குள்ளாக இருவரும் ஆள் காணோம்.
ஜன்னத்திடம் தயங்கியபடியே பணத்தை நீட்ட புன்னகைத்தபடியே ஜீனத்தின் உள்ளங்கையோடு அதை மூடிவைத்துவிட்டு விடைபெற்றாள்.
தேவதைதான்! யாரைப் பார்த்தால் காரணமேயன்றி உள்ளம் பூரித்துப் போக முடிகிறதோ அவர்களெல்லாம் தேவதைகளன்றோ… வாசல் விட்டு மறையும் வரை ஜன்னத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். தூக்கிய புர்காவின் பிடியிலிருந்து நழுவிய சேலையிலிருந்த கற்களின் ஜொலிஜொலிப்பு ஜீனத்தின் கண்ணில் கூசி கன்னத்தில் கீறியது. நிஜமாய் கீறியதோ எனத் தடவியும் பார்த்துக்கொண்டு பெருமூச்சு அவிழ்த்தாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் கண்ணை முட்டும் காலண்டரில் இருந்து விழுந்து, எழுந்து அவள் முன்னே வந்த எண்கள் ஒவ்வொன்றும் அவள் ஈரக்குலையைப் பறித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தது.
சாபிராவும் ஜாஸ்மினும் பள்ளிக்கூடத் தோழிகள் இல்லை. சொல்லப் போனால் சாபிரா 8ம் வகுப்பு படிக்கிறாள். ஜாஸ்மின் 7வதுதான். சாபிரா படிப்பது, தனியார் முஸ்லிம் பள்ளியில். முஸ்லிம் என்பதால் கூடுதல் சலுகை கிடைக்க வாய்ப்பிருந்தும் அரசுப் பள்ளிதான் ஜாஸ்மின் குடும்ப நிலைக்குச் சரியான தேர்வாக இருந்தது. சாபிராவின் வீடு மேலத்தெருவில் இருக்கிறது. மேலத்தெரு என்பது பெயர் மட்டும் அல்ல, அதுவொரு அந்தஸ்து. ஜாஸ்மினின் வீடிருப்பது பெயரில் மட்டுமே அண்ணாவைக் கொண்ட ஒதுக்குப்புற நகர். தராதரத்தில் கீழத்தெரு. இருவரையும் ஒன்று சேர்த்தது மேலப்பள்ளிவாசலில் நடக்கும் மாலைநேர மதர்ஸாதான். சாபிராவின் வீட்டுக்குப் பக்கத்துக் கட்டிடம். அண்ணாநகரில் சமூகசேவை நோக்கில் ஓர் ஆலிமா வந்து ஓதிக்கொடுத்தாலும் கூட ஆலிமாவிற்கான கட்டணம் மாதம் 25 ரூபாய் என்பதால் மேலப்பள்ளிவாசல் மதர்சாவுக்கே ஜாஸ்மினை அனுப்பி வைத்தாள் ஜன்னத்.
ஒருமணி நேர மதரசா வகுப்பில் தான் இருவரும் உயிர்த் தோழிகளாகியிருக்கிறார்கள். சாபிரா விளையாட எங்கும் செல்வதில்லை. ஜாஸ்மினுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாததால் விடுமுறை நாள் முழுக்க சாபிரா வீட்டில்தான். சில நேரம் மதியம் சாப்பிட வீட்டிற்குப் போவாள். சொற்ப வேளை சாபிரா வீட்டிலேயே சாப்பிட்டிருக்கிறாள். பல நேரம் தன்மானம் தடுக்க, வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வருவதாக சாபிரா வீட்டிலும் பொய் சொல்லிவிட்டுச் செல்வாள். சாபிரா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டதாய் அம்மாவிடமும் பொய் கூறி, 15 நிமிட இடைவேளைக்குள் சிட்டாய் பறந்து சாபிரா வீட்டில் வந்து நிற்பாள். பசியெல்லாம் பொருட்டாய் நினைக்காத வயது இருவருக்கும். பசியைவிடத் தனிமையும், டீவியும், டீவியில் வரும் பாட்டுக்களும் அதற்கான நடனங்களும் முக்கியமாகப் பட்ட காலகட்டம். சாபிரா வீடு அவள் வயதுக்கும் மனநிலைக்கும் பொருந்திப்போவதாய் இருந்தது.
சாபிராவின் அத்தா மலேசியாவில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கிறார். 2 வருடத்திற்கொருமுறைதான் வருவார். இப்போதும் வந்திருக்கிறார். அதனால் தான் வீடு திருவிழாக்கோலம் பூண்ட தனமாய் சுற்றுலாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சாபிராவின் குடும்பம் மட்டுமின்றி, அவளின் பெரியம்மா, சின்னம்மா, மாமா குடும்பத்தினர் என ஒரு பெரிய வேன் நிரம்பும் அளவுக்கு ஆட்கள் திரண்டிருந்தனர். சாபிராவின் அத்தா ஊருக்கு வந்துவிட்டால் சாபிராக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே சந்தோஷம் தான். அவர் தான் பயணத்துக்கான மொத்தச் செலவும் செய்பவர்.
ஜாஸ்மின் இதுவரைப் போன தர்ஹா சுற்றுலாக்களைப் போல் அல்ல இன்றைய தினம். அவளுக்கு சாபிராவைத் தவிர எல்லாமுமே அன்னியமாகவும், வித்தியாச அனுபவமாகவும் இருந்தது. சாபிராவும் ஜாஸ்மினும் வேனின் இறுதி இருக்கையைப் பிடித்துக்கொண்டார்கள். காதலில் விழுந்தவர்கள், நிச்சயம் முடிந்து திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஜோடிகள் போனில் பேசிக்கொண்டிருப்பதுபோல் பதின்மத்திற்குள் நுழையவிருக்கும் சிறுமிகளின் உரையாடலும் எப்போதும் தீர்வதேயில்லை. அதனால் அதற்கு வாகான இடத்தைத் தேர்வு செய்து கொண்டார்கள். வேடிக்கை பார்ப்பதும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்ததுமாக மகளின் தோழமை நினைத்து ஜன்னத்துக்கு அவ்வளவு பெருமிதம்.
கொடுக்கப்பட்ட தின்பண்டங்களை ஒரே பாலிதீன் பைக்குள் வைத்து இருவரும் சாப்பிட்டுக்கொண்டே வந்தார்கள். இதைக் கண்ட சாபிராவின் பெரியம்மா சொன்னார்,
“ரெண்டு பேருக்கும் ஒரே மாப்பிள்ள தான் பாக்கணும் போல ஜன்னத்து! எப்பவும் ஒன்னாவேல சுத்துறாளுக. ஒரே தட்டுலதான் சாப்பிடுவேங்குறாளுக…”
வேகத்தடையில் ஏறி இறங்கினதுபோல் சிரிப்பலையில் வேன் குலுங்கியது.
கன்னியாகுமரி, குற்றாலம், திற்பரப்பு – ஒரு வட்டம் அடித்துவிட்டு ஜாஸ்மின் வீடு திரும்பிய பின்னேதான் காலண்டரின் எண்கள் ஜன்னத்தின் ஈரக்குலையை விடுவித்து மீண்டும் தன் தாளில் அமர்ந்துகொண்டது. ஜன்னத்துக்கு உயிரும் அந்த நொடியில்தான் மீண்டு வந்திருந்தது.
சுற்றுலா முடிந்துவந்த பின் ஒருவார காலம் வரையிலும் அதன் தாக்கம் குறையவில்லை. நிகழ்ந்ததெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லிப் பார்த்து சாபிராவும் ஜாஸ்மினும் சிரித்துக்கொண்டார்கள்.
சாபிரா திடீரென அமைதியானாள்.
“நா ஒரு விஷயம் சொல்லுவேன் நீ யார்ட்டையும் சொல்லக் கூடாது சரியா?”
சாபிரா சொன்னதும் அவள் அருகே நகர்ந்து அமர்ந்து காதுகளைக் கூர்தீட்டிக் கொண்டாள்.
“எப்பன்னு தெரியல. எப்படியும் ஒரு வாரத்துக்குள்ள… எனக்கு விசேசம் வைப்பாங்க. அப்போ நீ என்கூடவே இருக்கணும்.”
சாபிரா, தான் காத்த ரகசியத்தைச் சொல்லவும் முடியாமல் காக்கவும் முடியாமல் திணறித்திணறி குழப்பமாய் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக்கொண்டிருந்தாள்.
“உன்கிட்ட கூட எங்கம்மா சொல்லக் கூடாதுன்னுதான் சொன்னாங்க. ஆனா எனக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுது. நா காப்பரிச்ச லீவுக்கே வயசுக்கு வந்துட்டேன். ஆனா எங்கம்மா சொல்லக்கூடாதுன்னுட்டாங்க”
“ஏன்….”
ஜாஸ்மின்க்கு அதற்கு மேலும் வார்த்தை வரவில்லை. குழப்பமோ குற்ற உணர்ச்சியோ அவளைத் தொற்றிக்கொண்டது.
“அத்தா லீவுக்கு வந்த பின்னாடி சொல்லிக்கலாம்னும், அத்தா இதுக்காக கடைக்கு லீவு போட்டு வர முடியாதுன்னும் சொன்னாங்க. அத்தா, லீவுக்கு வரப்ப பீரியட்ஸ் வரும்போது அப்போதான் நான் வயசுக்கு வந்ததா எல்லாருக்கும் சொல்லுவாங்களாம். அத்தா அதுக்குள்ள நகையெல்லாம் வாங்கி ரெடியாகணும்ல. அதுக்காக இவ்ளோநாள் யார்ட்டையும் சொல்லல. அத்தாவுக்கும், அம்மாவுக்கும் அப்பறம் உனக்கும் மட்டும்தான் இது தெரியும். அல்லாஹ் ப்ராமிஸ்?”
“சொல்லமாட்டேன் யாருக்கும். அல்லாஹ் ப்ராமிஸ்”
குற்ற உணர்ச்சி சாபிராவிலிருந்து விடுபட்டது. ஜாஸ்மினுக்குதான் அங்கே இருக்க பாரமாக இருந்தது. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் கேட்டுவிடத் தோன்றியது.
தையல் மிஷினோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள் ஜன்னத்.
“நா வயசுக்கு வந்தத எப்ப சொல்லப்போற”
பெரும் போராட்டத்துக்குப் பின் முனைக்குள் நுழையவிருந்த நூலின் நுனி, ஜாஸ்மினின் கேள்வி ஏற்படுத்திய அதிர்ச்சியில் கை அதிர்ந்தால், முனைக்குள் இருந்து வழுக்கிக்கொண்டு வெளியேறி, முயற்சியைத் தோற்கடித்தது.
ஒவ்வொரு மாதமும் தன்னை அச்சுறுத்தும் காலண்டரை இம்முறை ஜன்னத் பார்க்கவில்லை. நூல்கண்டுக்குள் ஒளித்துவைத்த பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே அதன் போதாமையை உணர்ந்து தலைகுனிந்தாள்.










